நவீன உலகத்தில் கைப்பட யார் கடிதம் எழுதுவார்கள்? ஏன் கையில் எழுத வேண்டும்? என்று எண்ணத் தோன்றும். தமிழில் தட்டச்சு செய்ய வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. பள்ளிகளிலும் தமிழ்த் தட்டச்சு சொல்லித் தரவில்லை. இதைக் கற்க அவசியமும் ஏற்படவில்லை.
அட்டவணை இல்லாமல் எப்போதாவது எழுதிக் கொண்டிருந்த வேளையில் வாராவாரம் எழுதி ஞாயிற்றுக்கிழமை பகிர்ந்தால் என்ன என்று தோன்றியது? நான் எழுதி யார் படிப்பார்கள் என்றும் தோன்றியது? யார் படிக்கிறார்களோ இல்லையோ, ஒவ்வொருவரும் எழுத வேண்டும். யாரும் படிக்கவில்லை என்றாலும் நாம் எழுதியது என்றேனும் ஒரு நாள் நமக்கே பயன்படும். இவ்வாறு தோன்றியதுதான், இந்த நூல். ஒவ்வொரு வாரமும் 2023-ம் ஆண்டு கைப்பட எழுதி இணையத்தில் வெளிவந்த கடிதங்களின் தொகுப்பு தான் ‘ஞாயிறு கடிதம்’.
இந்தக் கடிதங்களால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது என்று தோன்றலாம். எழுத்திற்கு வலிமை உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். எந்த ஒரு பெரிய மாற்றமும் சிறுசிறு முயற்சிகள் மூலம் தான் உருவாகும். முன்னேற்றம், மாற்றம் விரும்புவோருக்கும் அதைச் செயல்படுத்த விரும்புபவர்களுக்கும் ஞாயிறு கடிதம் ஒரு கையேடாகக் கூட இருக்கலாம்.

Share This eBook: